ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படம் பாலிவுட்டில் அதிகம் கவனிக்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்திலும் இடம்பெறுகிறார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கவுரி கான், சித்தார்த் ஆனந்த், மம்தா ஆனந்த் ஆகியோர் தயாரிப்புப் பொறுப்பில் உள்ளனர். ‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத்துடன் வெளியான போஸ்டர் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது. டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாகப் படம் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்த அனிருத் தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.
திருமணம் தொடர்பான காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகப் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், படத்திற்காக ஏற்கெனவே அனிருத் உருவாக்கியிருந்த தீம் மியூசிக்கை ஷாருக்கானுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதையடுத்து சச்சின் – ஜிகர் இப்படத்தின் இசைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர்.
