மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலி, ஆரம்பத்தில் ரசிகர்களைக் கவரும் வெற்றிப் படங்களில் நடித்தார். பின்னர் கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தவறுகளால் சரிவைச் சந்தித்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து ரூ.100 கோடி வசூலைக் கடந்தது.
தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து, மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அவருக்குப் பெயர் பெற்றுத் தந்துள்ளது. இவ்விரு படங்களையும் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடியதே அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதுகுறித்துப் பேசிய நிவின் பாலி, “ஒரு படம் குடும்ப ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்து நான் எப்போதும் கதையைத் தேர்வு செய்வதில்லை. ஒரே குடும்பத்தில் இருக்கும் இளைஞர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு படத்தைப் பார்க்கிறார்கள். எனவே, கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் படங்களைத் தேர்வு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
