தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி, இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து ‘வேட்ட சாமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த எதிர்பாராத கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், ஹரீஷ் பெரேடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எம். செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சாமுவேல் மேத்யூ தனது ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனம் ஏற்கெனவே சித்தார்த் நடித்த ‘மிஸ் யூ’ படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தென் தமிழகத்தின் கிராமிய மண்வாசனையுடன், காவல் தெய்வங்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கிராமிய வாழ்வியலையும் அதிரடி அம்சங்களையும் இணைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வில்லுப்பாட்டுக் கலைஞர் மாதவி இப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். அவர் பாடியுள்ள ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ என்ற நாட்டுப்புறப் பாடல், வீரத்தையும் தெய்வ நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.‘வேட்ட சாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
