அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அபிலாஷ், பிரபல இயக்குநர் ஐ.வி. சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
போர் சூழலில் இலங்கையிலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு தமிழகம் வரும் ஒரு தந்தையைச் சுற்றியே படத்தின் கதை நகர்கிறது. உறவினர் வீட்டில் மகளை ஒப்படைத்துவிட்டு செல்ல அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவர்கள் குழந்தையை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்ததால், தந்தையும் மகளும் ஆதரவின்றி தெருவில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதன்பிறகு தனது மகளின் மகிழ்ச்சிக்காக அந்த தந்தை எதிர்கொள்ளும் சவால்களும், அவர் எடுக்கும் முயற்சிகளும் கதையின் மையமாக அமைந்துள்ளன. இப்படத்திற்கு அவுசப்பச்சன் இசையமைத்துள்ளார். தாமரை மற்றும் பழனிபாரதி தலா பாடல்களை எழுதியுள்ளனர். மலையாள திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக பயணித்து வரும் அவுசப்பச்சன், இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுள்ள ‘தாய்நிலம்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
