இயக்குநர் ராம் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ழஇ கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ அக்டோபர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் தனது நீண்டகால கூட்டணி குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ‘கற்றது தமிழ்’ படத்தில் யுவன் இணைந்த விதம் குறித்து அவர் கூறிய தகவல் கவனம் பெற்றுள்ளது.
‘கற்றது தமிழ்’ கதையை சுமார் 30 நிமிடங்கள் யுவனிடம் கூறியபோதே, படத்திற்கு தானே இசையமைப்பதாக யுவன் தெரிவித்ததாக ராம் கூறினார். படம் முடிந்த பிறகு சம்பளம் தொடர்பான தனது தயக்கத்தை ராமே யுவனிடம் தெரிவித்தபோதும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அந்தப் படத்திற்கும் தானே இசையமைப்பதாகவும் யுவன் கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார். அப்போது தொடங்கிய இந்தப் பயணம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ வரை வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
யுவன் தன்னுடைய இசையமைப்பாளர் என்பதைக் கடந்து, சிறந்த நண்பர் மற்றும் நலம் விரும்பி என்றும் ராம் உருக்கமாக பேசினார். மேலும், யுவன் தன்னிடம் ‘நோ’ என்று சொல்லும் வரை அவரே தனது இசையமைப்பாளராக இருப்பார் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான தகவலையும் ராம் வெளியிட்டார். அடுத்ததாக ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க இருப்பதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். பல கதைகளை யுவனிடம் கூறிய நிலையில், அவற்றில் எந்த Genre-ல் படம் செய்யலாம் என்பதை யுவனே தேர்வு செய்ததாகவும் ராம் கூறினார். இதனால் இந்த புதிய கூட்டணியில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
