ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நகைக்கடை ஒன்றுக்காக வெளியான விளம்பரத்தில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பண்டிகைக்கான விளம்பரத்தில் இதுபோன்ற ஆடைகள் இடம்பெறுவது பொருத்தமற்றது என சிலர் விமர்சித்தனர். குறிப்பாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், பெண்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியும் உரிமை இருந்தாலும், சில விஷயங்களில் கலாச்சார எல்லைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கிருத்தி சனோன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு பண்டிகையின் உண்மையான அர்த்தம் ஒருவர் அணியும் ஆடையில் இல்லை என்றும், அந்த பாரம்பரியத்தை எந்த உணர்வுடன் கடைப்பிடிக்கிறோம் என்பதில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரக்ஷா பந்தன் என்பது சகோதரர் – சகோதரி இடையேயான பாதுகாப்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் பண்டிகை என்றும், தானும் தனது சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு பெண்ணின் உடையை வைத்து அவரது கலாச்சாரப் பற்றையோ பாரம்பரியத்தின் மீதான மரியாதையையோ தீர்மானிப்பது சரியான அணுகுமுறை அல்ல என கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் பாரம்பரிய ஆடைகளின் வடிவமும் மாறியுள்ளதாகக் கூறிய அவர், பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்பது ஒரு பெண்ணின் மனதில் இருக்க வேண்டிய விஷயம்; அவள் அணியும் உடையில் அல்ல என்பதே தனது கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.
