கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், ‘ஷமிதாப்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் ‘விவேகம்’, ‘கடாரம் கொண்டான்’, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள ஹிந்தி திரைப்படமான ‘சிமுலாக்ரா’ இன்று வேவ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைவுக் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், சத்யஜித் துபே கதாநாயகனாக நடித்துள்ளார். பங்கஜ் சாவந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் குறித்து அக்ஷரா ஹாசன் கூறுகையில், “இந்தப் படத்தில் ‘நிவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம் இது. இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறுவிதமான முதிர்ச்சி தேவைப்பட்டது. கதையின் பல அடுக்குகள் காரணமாக, ஒரு நடிகையாக என்னுள் இருந்த புதிய பரிமாணத்தை கண்டறியும் வாய்ப்பு கிடைத்தது. பலவிதமான உணர்வுகளின் மோதல்களை வெளிப்படுத்தும் சவாலும் இருந்தது. ‘நிவி’ கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை நான் உண்மையிலேயே ரசித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
—
