சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்த விழாவை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதே பாணியில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்சையும் மலேசியாவில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்துக்கு மலேசியாவில் உள்ள மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு ரஜினிகாந்த் இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை என்றும், அவரது கால்ஷீட், வெளிநாட்டு பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இசை வெளியீட்டு விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்கள் கழித்தே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
