இந்தியாவின் ‘எடிசன்’ என போற்றப்படும் கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ளார். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
கோவை கார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில், மாதவன் அதிவேகமாக கார் ஓட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மேலும், ஜி.டி.நாயுடுவின் முதல் பேருந்தில் அமர்ந்து பேசிய அவர், “நம் நாட்டின் பெருமைகளையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் சாதனைகள் மட்டுமல்ல, அவர் சந்தித்த போராட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் வெளியான பிறகு உலகமே ஜி.டி.நாயுடுவை பற்றி பேசும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
