தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது பான் இந்தியா அளவில் உருவாகும் புதிய படத்தில் 11 மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆர். கிஷோர் குமார் இயக்கும் இந்த திரைப்படம் காமெடி, ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர். கிஷோர் குமார், இந்தப் படத்தின் மூலம் தனித்துவமான கதைக்களத்தை ரசிகர்களிடம் கொண்டு வரவுள்ளார்.
இந்தப் படத்தில் யோகி பாபு ஹீரோ, வில்லன், நகைச்சுவை உள்ளிட்ட மொத்தம் 11 வேடங்களில் நடிக்கிறார். இதில் இரட்டையர் கதாபாத்திரங்களும் இடம்பெறுவதுடன், பல்வேறு மொழிகளில் பேசி நடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள நடிகை அதிதி ரவி கதாநாயகியாக நடிக்க, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பிளாக் பாக்ஸை தேடும் சாகசப் பயணமே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. அந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் பரபரப்புடன் திரையில் சொல்லவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
—
