சென்னையில் நடைபெற்ற ‘அங்கீகாரம்’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தென்பாதியான், இந்தக் கதையை முதலில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். அப்போது இந்தக் கதையை ஒரு முன்னணி நடிகரிடம் கூறியிருந்தாலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதனால் அந்தத் திட்டத்தை தற்காலிகமாக ஒதுக்கிவைத்து, வேறு ஒரு கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
அதன்பிறகு, இந்தக் கதையை தங்களைத் தவிர வேறு யாராலும் சரியான முறையில் திரையில் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டதால், மீண்டும் அதே கதையை கையில் எடுத்ததாக தெரிவித்தார். அப்போது தயாரிப்பாளர் கேஜேஆர், இந்தப் படத்தில் நானே கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று கூறியதையடுத்து, அவரை மையமாக வைத்து படப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார். என் கதாநாயகன் எந்த வகையிலும் குறையாகத் தோன்றக்கூடாது என்பதற்காக நானும், எனது படக்குழுவினரும் முழு ஈடுபாட்டுடன் உழைத்தோம். அந்த முயற்சியின் பலன் திரைப்படத்தில் தெளிவாக வெளிப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான கேஜேஆர், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், நல்ல அளவிலான வரவேற்பைப் பெற்று வருவதாக கூறினார். தனக்கு நெருக்கமான சிலரும், திரையரங்கு உரிமையாளர்களும், “வேறு கதையைத் தேர்வு செய்திருக்கலாம், வேறு ஹீரோ நடித்திருக்கலாம்” என்று கூறியதாகவும், ஆனால் தற்போது ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான முழு பாராட்டும் இயக்குநர் தென்பாதியானுக்கே சேரும். அவர் கூறியதை முழுமையாக நம்பி நடித்தேன். நான் தயாரித்த படங்களில் நடித்தவர்களோ, எனது நண்பர்களோ எனக்கு எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை. இருந்தாலும், இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் உறுதியாகக் கூறினார்.
—
