திரைத்துறை சார்ந்த 6 முக்கியமான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்த இயக்குனர் சீனு ராமசாமி!

இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி, தமிழகத்தில் திரைப்படத் துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் தமிழக அரசின் கவனத்திற்கு ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அனைவருக்கும் அன்பான வணக்கம்.

லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற நடைமுறைகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி வரும் மாண்புமிகு முதல்வர் திரு ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் கவனத்திற்கு, திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்த ஆறு முக்கிய கோரிக்கைகளை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, கேரளாவின் KSFDC மாதிரியில் சிறிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் வெளியிடுவதற்காக அரசுத் திரையரங்குகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் திரையரங்குகள் கிடைக்காமல் வெளியீட்டில் சிக்கித் தவிக்கும் தரமான சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

இரண்டாவதாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி (Film Appreciation) அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், ஒரு கலை வடிவமாக புரிந்துகொள்ளும் பார்வையை மாணவர்களிடம் உருவாக்க முடியும்.

மூன்றாவதாக, தமிழ்ச் சங்க மாநாட்டைப் போன்றே உலகளாவிய திரைப்பட மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும். இது தமிழ் திரைப்படப் படைப்பாளிகளுக்கும், உலகின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கும் ஒரே தளத்தில் சந்தித்து கருத்துகளைப் பகிரும் வாய்ப்பை உருவாக்கும்.

நான்காவதாக, பாரம்பரிய மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதிகளை ஆன்லைன் ஒற்றைச் சாளர முறையில் வழங்க வேண்டும். இதன்மூலம் தேவையற்ற அதிகார தாமதங்களும், மறைமுக லஞ்ச நடைமுறைகளும் தவிர்க்கப்பட முடியும்.

ஐந்தாவதாக, லண்டன் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வழங்கப்படுவது போல, நட்சத்திர மதிப்பு இல்லாத சுயாதீன திரைப்படங்களுக்கு அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும். இது புதிய படைப்பாளிகள் மற்றும் தரமான சிறிய திரைப்படங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.

ஆறாவதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலிவடைந்த கலைஞர்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தி, தகுதியான கலைஞர்களுக்கு அந்த வசதி விரைவாக கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

லஞ்ச ஒழிப்பை மட்டும் அல்லாமல், கலைத்துறையிலும் இத்தகைய கொள்கை ரீதியான மாற்றங்களை இந்த அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading