‘அம்மா’ என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. நடிகைகளுக்கு எதிராக நடந்ததாக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி, பல முன்னணி நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததைத் தொடர்ந்து, சங்கத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னாள் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட பலர் அமைப்பின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அம்மா அமைப்பின் வரலாற்றில் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்ற அவர் தலைமையிலான நிர்வாகத்தில் பல முக்கிய பதவிகளில் நடிகைகளும் இடம்பிடித்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நிர்வாகிகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பரஸ்பர குற்றச்சாட்டுகள், போலீஸ் புகார்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை விவகாரம் சென்ற நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பதவியேற்று 10 மாதங்களிலேயே தலைவர் ஸ்வேதா மேனன் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவியை விட்டு விலகியுள்ளனர்.
ராஜினாமாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா மேனன், “நானும் என்னுடன் இருந்த 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் ஒருமித்த முடிவாக ராஜினாமா செய்துள்ளோம். எங்களை பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டு சிலர் செயல்பட்டனர். முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அஜெண்டாவை பயன்படுத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் கட்டுப்பாட்டில் மீண்டும் சங்கத்தை கொண்டு செல்லும் முயற்சிதான் இது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “நாங்கள் வெறும் பெயரளவிலான நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். எனக்கென ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தை இழந்து பொம்மையாக செயல்பட முடியாது. அதனால்தான் சுயமரியாதையுடன் பதவியிலிருந்து விலகுகிறேன். தலைவர் பதவியில் இருந்து மட்டுமல்ல, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். முந்தைய நிர்வாகத்தில் பாபுராஜ் செய்த பல நடவடிக்கைகளில் முறைகேடுகள் உள்ளன. இதுவரை சங்கத்தின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தேன். இனி அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன். பெண்கள் தலைமையை ஏற்க மறுக்கும் மனநிலை இன்னும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் தொடர்வதில் அர்த்தமில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
