‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரத்திற்கு இதனால் தான் விமர்சனங்கள் எழுந்தன என நினைக்கிறேன் – இயக்குனர் புச்சி பாபு சனா!

இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் ராம்சரண் மற்றும் நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான ‘பெத்தி’ கடந்த ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் தற்போது 360 கோடி ரூபாயைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், படம் வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட விமர்சனம் அதிகமாக பேசப்பட்டது. அதாவது, படத்தின் நாயகியான ஜான்வி கபூரை இயக்குநர் வெறும் கிளாமர் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக சிலர் குற்றம்சாட்டினர். இந்த விமர்சனம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து இயக்குநர் புச்சிபாபு சனா உடனடியாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட புச்சிபாபு சனா, மீண்டும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜான்வி கபூரின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாகவும், கதையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகவும் உருவாக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் மொத்த நீளத்தை கருத்தில் கொண்டு, ஜான்வி நடித்திருந்த மூன்று முக்கியமான காட்சிகளை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் தான் அவரது கதாபாத்திரம் குறித்து இந்த மாதிரியான விமர்சனங்கள் எழுந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பார்வையாளர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு, வரும் புதன்கிழமை முதல் ஜான்வி கபூரின் இரண்டு முக்கிய காட்சிகளும், நடிகர் ஜெகபதி பாபு நடித்த ஒரு முக்கிய காட்சியும் மீண்டும் திரைப்படத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஜான்வியின் கதாபாத்திரத்தின் முழுமையான முக்கியத்துவம் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும்” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading