பல படங்களில் அம்மா கதாபாத்திரத்திற்கு ‘நோ’ சொல்லிவிட்டேன் – நடிகை சுவாசிகா!

‘நூறு சாமி’ திரைப்படம் குறித்து நடிகை சுவாசிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் மற்றும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், “16 வயதிலேயே நான் நடிக்கத் தொடங்கிவிட்டேன். தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். அதன் பிறகு மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தேன். ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறேன். அதனால் இதை என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று கூட சொல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலமாகத்தான் ‘நூறு சாமி’ பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாக இயக்குநர் சசி சார் கூறியபோது மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தால், அதை யார் இயக்குகிறார்கள் என்பதும் மிகவும் முக்கியம். ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட சசி சாரின் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் முதல் முறையாக இந்தக் கதையை என்னிடம் கூறியபோதே எந்த தயக்கமும் இல்லாமல் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது கதாபாத்திரத் தேர்வு குறித்து பேசிய சுவாசிகா, “இந்த படத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்த்து, தெலுங்கு திரையுலகிலும் பல அம்மா கதாபாத்திர வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் எல்லா அம்மா கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. வெறும் காபி கொடுத்து செல்வது, டிபன் பரிமாறுவது அல்லது ‘சாப்பிடுங்கள்’ என்று ஒரு வசனம் பேசிவிட்டு வெளியேறுவது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் வயதாகவில்லை என்று சொல்லிவிட்டேன். ‘நூறு சாமி’ திரைப்படத்திலும் நான் அம்மா கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். ஆனால் இந்த அம்மா கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. படம் வெளியாகும்போது அதன் சிறப்பை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading