மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும், நீண்ட காலமாக அவருடன் இணைந்து பயணித்த இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய கங்கை அமரன், “எங்களை வளர்த்து ஆளாக்கிய மனிதர் பாரதிராஜா. அவர் சென்னைக்கு வரவில்லை என்றால் இளையராஜாவும் நாங்களும் சென்னைக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. தனது சம்பளத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ வைத்தவர் அவர். எங்களுக்கு உணவு கொடுத்து, வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியவர். இன்று அப்படிப்பட்ட மனிதரை நாம் இழந்துவிட்டோம். இந்த இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையாக உள்ளது” என்று கண்கலங்கியபடி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “பாரதிராஜா எங்களுக்காக செய்த உதவிகள் ஏராளம். என்னையும், கவிஞர் வைரமுத்துவையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். இன்று அவர் நம்மிடையே இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை. ஆனால் அவர் உருவாக்கிய படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவருடைய திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள், அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
