‘ஜெயிலர்-2’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான புது அப்டேட்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இந்த திரைப்படத்திலும் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, நடிகர் சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது.

அண்மையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி இசை, காட்சித் தொகுப்பு மற்றும் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 8-ஆம் தேதி திரைப்படத்தை வெளியிடுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படங்கள் பண்டிகைக் காலங்களில் வெளியாகும்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவது வழக்கம். இதனால் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் செப்டம்பரில் வெளியாகுமா அல்லது தீபாவளி வெளியீடாக வருமா என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading