தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தவெக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், அதன் தலைவரும் தமிழகத்தின் முதல்-அமைச்சருமான விஜய்க்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக சினிமா உலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை, அவருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவின. விஜய்யின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “விஜய்யை இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் எங்களது சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. அந்த சந்திப்பின் போது ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் நான் வெளிப்படுத்திய நடிப்பை விஜய் பாராட்டினார். மேலும், தேசிய விருது பெற்றதற்காகவும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் மனைவி விஜய்யின் மிகத் தீவிரமான ரசிகை. தேர்தலில் தவெக முன்னிலை பெற்றதாக தகவல் வெளியானபோது, அவர் இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார். இந்த விஷயத்தை விஜய்யிடம் நான் கூறியபோது, உடனடியாக என் மனைவியுடன் அவர் தொலைபேசியில் பேசினார். நடிகராக இருந்த காலத்தில் என்னிடம் அவர் காட்டிய அதே அன்பையும், அதே மரியாதையையும் இன்று முதல்-அமைச்சராக இருந்தும் தொடர்ந்து காட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் அளித்தது” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
