எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. 1983ஆம் ஆண்டு வெளியான ‘பெயிண்டர் பாபு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் ‘ஹீரோ’, ‘தாமினி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக.உயர்ந்தார்
தமிழிலும் பாக்யராஜுடன் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ மற்றும் நடிகர் பிரபுவுடன் ‘டூயட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது உச்சகட்ட சினிமா பயணத்தின் போது ஹரிஷ் மைசூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய அவர், அங்கு பரதநாட்டிய பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக நடிகை மீனாட்சி சேஷாத்திரி அறிவித்துள்ளார். இதற்காக அவர் தற்போது மும்பையில் புதிய வீடு ஒன்றை எடுத்து குடிபுகுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பெரிய கதாபாத்திரமோ, சிறிய கதாபாத்திரமோ என்பது முக்கியமல்ல. பார்ப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா மட்டுமல்லாமல் ஓடிடி தொடர்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
எனக்காக எந்த ஏஜென்டோ அல்லது பி.ஆர். நிறுவனமோ இல்லாமல், நானே தனியாக வாய்ப்புகளைத் தேடி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
