பல நாட்கள் பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன்… நெகிழ வைக்கும் ‘பேட்ட’ பட நடிகர் நவாஸுதீன் சித்திக்!

‘கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாஸுதீன் சித்திக், இன்று பாலிவுட்டில் தனக்கென தனி அடையாளத்தையும் முக்கியமான இடத்தையும் உருவாக்கியுள்ளார். சமீபத்தில் ‘ரேடியோ நாஷா’ இதழுக்கு அளித்திருந்த பேட்டியில், தனது ஆரம்பகால சினிமா பயணம், தொடர்ந்து சந்தித்த தோல்விகள் மற்றும் கடுமையான வறுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இருக்கும் போது, நமக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது அளவற்ற காதலும் இருக்கும். ஆனால் தொடர்ந்து கிடைக்கும் தோல்விகள் அந்த தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் நம்மையே நாமே சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவோம். ‘நாம் இந்தத் துறைக்கு பொருத்தமானவர்களா?’ என்ற கேள்வி மனதில் எழத் தொடங்கும். அந்த மாதிரியான மனநிலையை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் தருணத்தில், அது கடைசி நேரத்தில் கைவிட்டுப் போய்விடும். சுமார் பத்து ஆண்டுகள் வரை நான் என்னை ஒரு துரதிர்ஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டே வாழ்ந்தேன். பெரிய வாய்ப்புகள் வந்து சேரும் நேரத்தில், எதிர்பாராத தடைகள் உருவாகி அவை நழுவிச் சென்று விடும். அந்த சமயங்களில் நண்பர்களிடம் பெருமையாக ‘எனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துவிட்டது’ என்று கூறுவேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் தருணத்தில் என்னை நீக்கிவிடுவார்கள். சில நேரங்களில் அதைப் பற்றிய தகவல்கூட எனக்குத் தெரிவிக்கப்படாது.

அந்த தருணங்களில் நடுரோட்டில் நின்று அழ வேண்டும் போல உணர்ந்திருக்கிறேன். சில சமயங்களில் உண்மையிலேயே அழுதும் இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக சுற்றிலும் கவனித்துக்கொண்டே அழுவேன். அந்த வறுமை நிறைந்த நாட்களில், ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன். இன்று கூட அந்த பிஸ்கட்டை சாப்பிடும் போது பழைய டெல்லி நாட்கள் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் அனுபவித்த கஷ்டங்களும் வேதனைகளும் இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கின்றன” என்று நவாஸுதீன் சித்திக் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading