இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘விலங்கு’ இணையத் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கியிருந்த அவர், தற்போது நடிகராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரண்ட்’ என்ற குற்றத் த்ரில்லர் இணையத் தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடரை சிவன் பிக்சர்ஸும், எஸ் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.
கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த அதிரடி குற்றவியல் தொடர், சாதாரண காவலராக வாழ்ந்து வரும் ‘கோட்டை கருப்பசாமி’ என்ற நபரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பாக நகரும் இந்த தொடர், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ‘வாரண்ட்’ இணையத் தொடர், வரும் 2026 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
