‘‘பேட்ரியாட்’ படத்தின் பார்த்துவிட்டு மம்முட்டி – மோகன்லாலை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய இயக்குனர் பார்த்திபன்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ரியாட்’. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பேட்ரியாட்’ திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் இந்தப் படத்தின் நடிகர்களாக இருந்தார்கள். ஆனால் நான் மட்டும் ஒரு சாதாரண பார்வையாளனாக மாறிவிட்டேன். அந்த இரண்டு பெரிய ‘எம்’களான மம்மூட்டியும் மோகன்லாலும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் நட்சத்திரங்களாக வரவில்லை. அவர்கள் ஒரு அனுபவமாக வந்திருக்கிறார்கள்.

மம்மூட்டி சார் வசனங்களை வெறுமனே பேசி நடித்துக் காட்டவில்லை. அவர் தனது மௌனத்தின் மூலமே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். மோகன்லால் சார் மிகவும் சாதாரணமாக திரைக்குள் வாழ்ந்து காட்டுகிறார். அந்த எளிமையை யாராலும் கற்றுக்கொள்ள முடியாது. அதை வாழ்ந்து உணர்ந்தால்தான் புரியும்.

பகத் பாசில் மீண்டும் ஒருமுறை தனது தனித்துவமான நடிப்பை நிரூபித்திருக்கிறார். பயம், குழப்பம், புத்திசாலித்தனம் போன்ற பல உணர்வுகள் மின்சாரம் போல அவரின் நடிப்பில் வெளிப்படுகின்றன. அதேபோல் குஞ்சாக்கோ போபனும் மிக அழகான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். வெளிப்படையாக அமைதியாகத் தெரியும் அவர், உள்ளுக்குள் புயலை வைத்திருப்பது போல நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மலையாள திரைப்படம் அல்ல. மலையாளப் படம் என்ற பெயரில் அமைதியாக ஒரு சர்வதேசத் தரமான ஆங்கில திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இயக்குநர் மகேஷ் நாராயணன் வெறும் படம் எடுக்கவில்லை. அவர் நம்மை நேரடியாக அந்த உலகிற்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இப்போது தொழில்நுட்பம் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் ரசனை எல்லோரிடமும் இருப்பதில்லை. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அந்த ரசனை தெளிவாக தெரிகிறது. எந்தக் காட்சியும் பார்வையாளர்களை கவர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியும் மனதில் நீண்ட நேரம் நிற்கிறது. மேலும் ஒளிப்பதிவு வெறும் முகங்களை மட்டும் பதிவு செய்யவில்லை. அது பயம், பதற்றம், மௌனம் போன்ற உணர்வுகளையும் பதிவு செய்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரும் நடித்தது போல தெரியவில்லை. அவர்கள் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்போது பல திரைப்படங்கள் நாம் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் மிகச் சில திரைப்படங்களே நம்மை அவை பார்க்கின்றன என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ‘பேட்ரியாட்’ அந்த உணர்வை கொடுத்துள்ளது. அதுவே உண்மையான சினிமாவின் வெற்றி” என்று பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading