‘டிஎன் 2026’ தங்க நட்சத்திரம் திரைப்படம், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி, நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் தற்போது வைரலாகியுள்ளது.
இந்த டீசரை பார்த்த விஜய் ரசிகர்கள், இப்படத்தில் அவருடைய அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருதி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, நட்டி நட்ராஜ் அவர்களின் தோற்றம் விஜய் அவர்களை ஒத்ததாகவும், தம்பி ராமையா அவர்களின் தோற்றம் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களை நினைவூட்டும் வகையிலும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, டீசர் வெளியான தருணத்திலிருந்து இப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த தம்பி ராமையா விளக்கம் அளித்துள்ளார். “டிஎன் 2026 படத்தில் ‘படத்தை திரையிடு’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அதனால், அது ஜனநாயகன் படத்தை குறிக்கிறதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தப் படம் பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், தற்போது நடக்கும் சூழ்நிலைகளுடன் சில காட்சிகள் ஒத்துப்போவது எங்களுக்கே ஆச்சரியமாக தான் உள்ளது.
குறிப்பாக 10 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும். அப்படியிருக்க, தற்போது நடைபெறும் நிகழ்வுகளை உடனடியாக படமாக்குவது சாத்தியமல்ல. உதாரணமாக, வில்லிவாக்கத்தில் தவெக பிரச்சாரத்தின் போது நடந்த பாட்டில் வீச்சு சம்பவத்தை போன்ற காட்சிகள் எங்கள் படத்தில் இருப்பது எங்கள் குழந்தைப் பருவத்தில் நடந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய காட்சிகளே இப்போது நடப்பவற்றுடன் ஒத்துப்போகின்றன. எனவே, இதற்கு தற்போதைய அரசியல் சம்பவங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
