நடிகர் தனுஷுடன் ‘வாத்தி’ திரைப்படத்தில் இணைந்து நடித்த பின்னர், தற்போது ராகவா லாரன்ஸுடன் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் சம்யுக்தா. இதனைத் தொடர்ந்து, ‘பிளாக் கோல்ட்’ எனப்படும் திரைப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் குறித்து சம்யுக்தா வெளியிட்டுள்ள தகவலில், “பிளாக் கோல்ட்’ திரைப்படத்தில் கதையின் மையக் கதாபாத்திரமாக நான் நடிக்கிறேன். அதோடு, முதன்முறையாக தைரியமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பது எனக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை உடலில் காயங்கள் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
அதோடு, தற்போது ‘ஸ்வயம்பு’ எனப்படும் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் விளையாட்டு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படமும் என்னை ஒரு புதிய கோணத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்த உள்ளேன் என்றும் சம்யுக்தா கூறியுள்ளார்.
