நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய வெப் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’ விரைவில் வெளியாக இருக்கிறது. ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் மணிகண்டன், அதன் பின்னர் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற படங்களை இயக்கியவர். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் புதிய வெப் தொடரை இயக்கியுள்ளார் . இந்த தொடர் வருகிற மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இந்த வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் நடித்துள்ளார். இவர் முன்னதாக தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘முத்து என்கிற காட்டான்’ வெப் தொடரில் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், சக நடிகரான விஜய் சேதுபதி குறித்து பாராட்டுகளுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி குறித்து அவர் கூறியபோது, “இந்த படத்தின் கதை எனக்கும், நான் நடித்துள்ள கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட முக்கியமாக, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்பதுதான் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் அவர் அனைவருக்கும் வசதியாக இருக்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்குவார்.
அவரை மிகவும் எளிதாக அணுக முடியும். எந்த விஷயத்தையும் அவரிடம் சுதந்திரமாக பேச முடியும். அவருடன் ஒரே காட்சியில் நடிக்கும் போது எந்தவித பதற்றமும் இல்லாமல் இயல்பாக நடிக்க முடிகிறது. போட்டி மனப்பான்மை அல்லது எதிர்மறை உணர்வுகள் இல்லாமல் சுதந்திரமாக நடிக்கச் செய்யும் தன்மை அவரிடம் உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் எளிதான அனுபவமாகும். இப்படிப்பட்ட நல்ல குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவதே என்னைப் போன்ற நடிகர்கள் விரும்பும் விஷயமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
