‘துரந்தர் 2’ திரைப்படத்தில் நடிக்காதது ஏன்? மனம் திறந்த‌ நடிகர் அனில் கபூர்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாலிவுட் திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘துரந்தர்’. இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் 1300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய சாதனையைப் பதிவு செய்தது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதித்யா தர் இயக்கியிருந்தார். நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

முதல் பாகம் வெளியானது முதல் வெறும் நான்கு மாதங்களுக்குள் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை வெளியிட படக்குழு தயாராகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை படக்குழு அழைத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தின் இயக்குநர் ஆதித்யா தர் என்னை தொடர்புகொண்டு இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அந்த கதாபாத்திரம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர் கேட்ட அந்த தேதிகளில் நான் ஏற்கனவே மற்றொரு திரைப்படத்திற்காக தேதிகளை ஒதுக்கி வைத்திருந்தேன்.

சினிமா உலகில் நான் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு காரணம் வெறும் திறமை மட்டுமல்ல. நான் ஒப்புக்கொண்ட பணிகளை நேர்மையாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையால் தான். அதனால் தான் ஆதித்யாவிடம், இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலையை மாற்ற முடியாது என்று கூறினேன். இது எனக்கு ஒரு இழப்பு தான். இருப்பினும் அதில் பிரச்சனை இல்லை” என்று அனில் கபூர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading