ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் கோவில் பூசாரியாக வாழ்ந்து வருகிறார் யோகி பாபு. அந்த ஊரில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். தண்ணீர் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று ஊர் மக்கள் பல்வேறு வழிகளை யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர், கிராம மக்களுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று மனு அளிக்கிறார். ஆனால் அந்த மனுவிற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், நிலத்தின் கீழ் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கக்கூடிய ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவர் தண்ணீர் இருக்கும் இடத்தை காட்டுகிறார். ஆனால் அவர் காட்டிய அந்த இடம் யோகி பாபுவுக்குச் சொந்தமான நிலப்பகுதிக்குள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆரம்பத்தில் தனது நிலத்தை தோண்டுவதற்கு யோகி பாபு மறுக்கிறார். பின்னர் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனது நிலத்தில் தோண்ட அனுமதி அளிக்கிறார். ஆனால் அந்த இடத்தில் தோண்டும்போது அங்கு தண்ணீர் கிடைப்பதற்குப் பதிலாக ஒரு பெரிய டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த விஷயம் வெளியில் தெரிய வந்ததும் அந்த முழு கிராமமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையில் தண்ணீர் இல்லாத அந்த கிராமத்தில் தனது மகள் லவ்லின் சந்திரசேகரை திருமணம் செய்து கொடுக்க யோகி பாபுவின் காதலியின் தந்தை ஆரம்பத்தில் மறுக்கிறார். ஆனால் நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டால் தண்ணீர் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் பின்னர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க அவர் சம்மதிக்கிறார்.ஆனால் டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்திற்கு தண்ணீர் கிடைத்ததா? யோகி பாபுவின் திருமணம் நடந்ததா? என்பதே இந்த திரைப்படத்தின் மீதிக் கதையாக அமைகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள யோகி பாபு தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரின் காதலியாக நடித்துள்ள லவ்லின் சந்திரசேகரும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்றாக நடித்துள்ளார். மேலும் ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிவாஸ் பிரசன்னாவின் இசை திரைப்படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் காட்சிகள் கதையுடன் நன்றாக பொருந்துகின்றன. மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உருவாகும் தண்ணீர் பிரச்சினையை கதையாக எடுத்துக் கொண்டு, அதனை நகைச்சுவையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் சொல்லியுள்ளார்.
