இந்தியா மற்றும் இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர், வருகிற பிப்ரவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன.
தமிழ், தெலுங்கு சினிமாவைத் தாண்டி, ஹிந்தி திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக தனக்கென உறுதியான இடத்தை பிடித்துள்ளவர் அனிருத். இவர் தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும், ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ‘தி கிங்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கான புதிய அதிகாரப்பூர்வ பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “கிரிக்கெட் என்பது ஒரு சாதாரண போட்டி அல்ல; அது ஒரு உணர்வு. ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், உண்மையான திரில்லர் அனுபவத்துடன் போட்டிகளை காணலாம். ஐசிசி உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
