Friday, April 12, 2024

தமிழ்த் திரையுலகத்தில் 2000 கோடி ரூபாய் முடக்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தக் கொரோனா லாக்டவுன்-2-ம் பாகத்தில் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மீண்டும் சட்டென்று எழ முடியாத அளவுக்கு முடங்கியுள்ளது.

பல திரைப்படங்கள் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவை பெரிய பட்ஜெட் படங்கள்தான்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்.’, வசந்தபாலனின் ‘ஜெயில்’, அதர்வா நடித்த ‘குருதி ஆட்டம்’, ஹன்ஸிகா நடித்த ‘மஹா’, விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’, சசிகுமார் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’, ‘ராஜ வம்சம்’ ஆகிய மீடியம் பட்ஜெட் படங்களும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன. இதுபோல சென்ற ஆண்டு பூஜை போடப்பட்டு துவங்கிய 30-க்கும் மேற்பட்ட படங்களும் முடங்கியுள்ளன.

இவை போக மேலும் மூன்று மெகா பட்ஜெட் படங்களும் இந்தக் கொரோனாவால் பெரிதும் பாதிக்குப்பட்டுள்ளன. ‘பொன்னியன் செல்வன்’, ‘இந்தியன்-2’, ‘வலிமை’ ஆகிய இந்த மூன்று படங்களிலும் சுமார் 1000 கோடி ரூபாய் பணம் முடங்கிப் போயுள்ளது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாராகி வந்தது மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

முதல் பாகத்திற்கான 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனாவால் லாக் டவுனாக படமும் லாக் ஆகிவிட்டது. உதய்ப்பூரில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு என்று அறிவிக்கப்பட்டும் கிளம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது படக் குழு.

இந்தப் படத்திற்காக மிக நீண்ட நாட்களாக தாடி வளர்த்து வைத்திருக்கும் அனைத்து நடிகர்களும் இதனால் பெரிதும் மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இதற்கடுத்து இன்னுமொரு பெரிய பட்ஜெட் படமாக உருவானது ‘இந்தியன்-2’ திரைப்படம். இதையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் 236 கோடி. கொரோனாவால் இந்தப் படமும் முடங்கிப் போயிருக்க.. கமல்ஹாசன் அடுத்து தான் தயாரிக்கும் ‘விக்ரம்-2 படத்திற்குப் போய்விட்டார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் லைகா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர.. அங்கேயும் சிக்கல் நீடிக்கிறது. சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தினால் ஒழிய இந்தப் பிரச்சினை ஒழியாது போலிருக்கிறது. மேலும் நடிகர் விவேக்கின் மரணத்தினால் அவர் நடித்த காட்சிகளை வேறொரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க வேண்டும். பல்வேறு செலவுகள் கூடும் என்பதால் இந்தப் படத்தின் பட்ஜெட்டும் எகிறும்போலத் தெரிகிறது. இருந்தும் படம் மீண்டும் டேக் ஆஃப் ஆவது எப்போது என்பது ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் மட்டுமே தெரியும்.

இதற்கடுத்து நடிகர் அஜீத்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தைச் சொல்லலாம். அஜீத்தின் சம்பளத்துடன் சேர்த்து இத்திரைப்படம் 150 கோடியைத் தொட்டிருக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விட்டு, விட்டு ஷூட்டிங்கை நடத்தியும் இன்னமும் முடிக்க முடியவில்லை. முக்கியமான கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் மட்டுமே படமாக்க வேண்டிய நிலை உள்ளது என்பதால் கொரோனா லாக் டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கார் ரேஷ் காட்சிகள் எடுக்கப்பட்டால்தான் படம் முழுமையடையும் என்பது இயக்குநரின் கருத்து. ஆனால் இது நடக்குமா என்று தெரியவில்லை. தற்போது அதில்லாத டப்பிங் பணிகள் வேகம், வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் அதுவும் லாக் டவுனால் முடிவுக்கு வந்ததால்.. இந்தப் படம் வெளியாவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

வரும் ஆகஸ்ட்டில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் அது சாத்தியமில்லை என்றுதான் தெரிகிறது. அநேகமாக இந்த ‘வலிமை’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு தள்ளிப் போகலாம் போலத் தெரிகிறது.

ஆக மொத்தத்தில், இப்போதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் முடங்கிக் கிடக்கிறது. தியேட்டர்கள் திறந்து பழையபடி சினிமா துறை நல்ல நிலைமைக்கு வரும்வரையிலும் இந்தத் துறையில் இருக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சிக்கல்கள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

- Advertisement -

Read more

Local News