Wednesday, April 10, 2024

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தி கோட் லைஃப்’ என்கிற பெயரில் மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் ‘ஆடுஜீவிதம்’ என பெயர் வைத்துள்ளனர்.

கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரிதிவிராஜ், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வீட்டை அடகு வைத்து தனது தாயார், கர்ப்பிணி மனைவி இருவரையும் தனியே விட்டு சவூதி அரேபியாவில் கட்டிட வேலை செய்ய செல்கிறார். அவருடன் ஹக்கீம் என்கிற நண்பரும் செல்கிறார்.

பாஸ்போட் மற்றும் விசாவுடன் சவுதியில் இறங்கி தங்களை அழைத்து செல்ல ஏஜென்ட் வருவார் என்று காத்திருக்கின்றனர். இவர்களுக்கு தாய் மொழியை தவிர வேறு மொழி தெரியாது.

ஏமாந்தவர்கள் அடிமையாக வேலை செய்ய கிடைப்பார்களா என்று அங்கு அலைந்து கொண்டிருக்கும் கஃபீல் என்பவனிடம் அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். தங்களை அழைக்க வந்த ஏஜென்ட் என்று நம்பி அவரிடம் பாஸ்போட் மற்றும் விசாவை கொடுத்து… அவருடன் சேர்ந்தே பயணிக்கும் பிரிதிவிராஜும், அவரது நண்பர் ஹக்கீமும் சவூதி வந்து சேர்ந்த செய்தியை ஊருக்கு தெரிவிக்க கஃபீலிடம் போன் கேட்கின்றனர்.

ஆனால், இவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நகரத்திலிருந்து தொலைதூரம் உள்ள பெரிய பாலைவனத்துக்கு அழைத்து செல்லும் கஃபீல், வெவ்வேறு இடங்களில் அவர்களை இறக்கிவிட்டு அங்கு ஆடுகள், ஒட்டகங்கள் பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் அவரிடம் பேசி அழுது காலில் விழுந்து தப்பிக்கலாம் என்று நினைத்த பிரிதிவிராஜுக்கு போக போக அங்கு ஏற்கனவே இருக்கும் அடிமையை பார்த்து அதிர்ந்து போகிறார். தப்பிக்க நினைத்தால் துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பான் கஃபீல் என்பதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்கிறார்.

வேறு வழி இல்லாமல் மூன்றாண்டுகள் அடிமையாக ஆடுகள் ஒட்டகங்களுடன் வாழும் பிரிதிவிராஜ், ஒரு நாள் அங்கிருந்து தப்பித்து திசை தெரியாத வழியில் செல்கிறார். அதன் பிறகு எப்படி அவர் ஊர் வந்து சேர்கிறார் என்பது மீதி படம்.

இந்தப் படத்தின் கதை உண்மை கதை. ஒருவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை அனுபவித்த கொடுமைகளை பென்யமின் நாவலாக எழுதி இருந்தார். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது பிளஸ்ஸி இயக்கத்தில் திரைப்படமாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தனது சிறிய கிராம வாழ்க்கையை விட்டு வெளியேறுவதில் இருந்து படம் தொடங்குகிறது. இடையிடேயே பிளாஷ் பேக் காட்சிகளில் பிரிதிவிராஜின் கர்ப்பிணி மனைவி சைனு, அதாவது அமலாபாலுடன் திருமணம்… மகிழ்ச்சியான வாழ்க்கை… எதிர்காலத்திற்கான திட்டம்… சவுதி அரேபியாவுக்கு செல்லவது போன்ற காட்சிகள் வந்து போகும். அந்த காட்சிகள் இயல்பானதாக உண்மைக்கு நெருக்கமாக சமரசமின்றி விரிவடைகிறது. நாமும் சவூதி அரேபியாவுக்கு சென்று அந்த சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உள்ளத்தில் கடத்துகிறார், இயக்குநர் பிளஸ்ஸி.

எப்போதும் வித்தியாசமான திரைக்கதைகளை முயற்சிக்கும் பிருத்விராஜ், இந்த படத்திலும் மரணத்திற்கு அருகில் உள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டி இருக்கிறார். நஜீப் முகமது என்கிற அந்த பாத்திரத்தின் அறியாமையை, ஏமாற்றத்தை, கஷ்டத்தை, வியர்வையை, கண்ணீரை, வலியை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அநாதை ஆக்கப்பட்ட ஒரு அடிமையை அவரின் உணர்வை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் போது அவருடைய அபாரமான நடிப்பு ஆற்றலால் அசந்து போகிறோம்.

தப்பித்து செல்லும் காட்சிகளில் பாலைவன சுடு மணலில் காலில் கொப்பளம், குடிக்க தண்ணீர் கிடைக்காமல், வழி தெரியாமல் மயங்கி விழுகிற காட்சிகளில் கண்ணீரை வரவழைக்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார். உடல் மாற்றத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்திருப்பதை காணும் போது அவரது நடிப்பு ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

பிரித்விராஜின் நண்பர் ஹக்கீம் பாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஆர். கோகுலின் நடிப்பும் அவ்வளவு இயல்பு. இவர்கள் இருவரையும் தப்பிக்க வைக்க உதவும் ஆப்பிரிக்க அடிமையான இப்ராஹிம் கான் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிம்மி ஜீன்-லூயிஸ் நடிப்பும் மனதில் நிற்கிறது. இவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் கஃபீல் பாத்திரத்தில் நடித்திருக்கும் தாலிப் அல் பலுஷியின் நடிப்பு செம மிரட்டல். பிரிதிவிராஜ் மனைவியாக வரும் அமலாபால் அந்தப் பாத்திரமாக மாறி மனதில் நிற்கிறார்.

முழு படமும் பாலைவனப் பகுதியில் நடக்கிறது. ஒரு முக்கியமான தருணத்தில் வரும் மணல் புயல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலைவன காட்சிகளிலும், பிருத்விராஜின் துன்பத்தையும் வலியையும் திறம்பட படம்பிடித்து காட்டி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ்.

ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்பதையே மறக்க வைத்திருக்கிறார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிகவும் நன்றாக உள்ளது. பல காட்சிகளின் தாக்கத்தை அவரது இசை உயர்த்துகிறது. திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் ரகுமானே பாடல் நம் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் பிளெஸ்ஸி, கதையை ஆழமாக விவரித்திருக்கிறார். சினிமா தனமே தெரியாத அளவுக்கு படத்தில் கமர்சியல் காட்சிகள் இல்லமால் உண்மைக்கு நெருக்கமாக நிஜ வாழ்க்கையை படைத்து உயர்ந்து நிற்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ஆழம்… அதற்கான மெனக்கடல் உழைப்பு தெரிகிறது. இருப்பினும் பாலைவனத்தில் எதற்காக ஆடு மேய்க்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம். முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது.

ஆடு ஜீவிதம் – கஷ்ட ஜீவிகளின் வாழ்க்கை

- Advertisement -

Read more

Local News