Wednesday, April 10, 2024

இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை போக்கி கொள்ள வெளியில் சென்று பேசி மகிழ்ந்து வீடு திரும்புவார்கள்.

காரில் வரும் போது அன்பு மிகுதியால் முத்தம் கொடுத்து கொள்ள முயலும் போது ஒருவர் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இந்த விபத்து காரணமாக காதலன் வெளிநாடு செல்ல தடையாகிவிடும் என்று கருதிய நாயகி பவ்யா, நாயகனை காரை எடுத்துக் கொண்டு போக சொல்கிறார்.

சாலையில் வரும் போது விபத்தை பார்த்தேன். கார் வேகமாக போய்விட்டது என்று போலீசுக்கு தகவல் கொடுத்து காதலனை காப்பாற்ற பவ்யா முயற்சிக்கிறார். ஆனால், காதலன் சிபி தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வருத்தப்படுகிறார். உண்மையை சொல்லி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்கு பவ்யாவும், சிபியின் நண்பர் ஜெகனும் தடையாக இருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் வெளியே போன தந்தை வீட்டுக்கு வரவில்லை என்று உயிரிழந்தவரின் மகன் ஆதித்யா தேடுகிறார். தாய் இறந்தது முதல் தந்தை தனக்காக வேறு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்பதால் அவருக்கு அவரது தந்தையை அதிகம் பிடிக்கும். மேலும் ஆதித்யாவுக்கு மனஅழுத்த வியாதி இருக்கும். இதனால் மயக்கமடையும் வரை கத்தி களேபரம் செய்வார். அவருக்கு அவ்வப்போது யாஷ்மின் என்கிற பெண்மணி உதவியாக இருப்பார்.

இந்த நிலையில் ஆதித்யாவின் தந்தைக்கு கடன் கொடுத்த தாதா வின்செண்ட் நகுல் அடியாட்களுடன் வீடு தேடி வருகிறார். கடனுக்கு பயந்து மகனை தனியாகவிட்டு தலைமறைவானதாக கருதி மகனை தங்கள் இடத்துக்கு கொண்டு சென்றால் தந்தை தேடி வருவான் என்று கணக்கு போடும் தாதா வின்செண்ட் நகுல் காரில் ஆதித்யாவை தூக்கிப் போட முயற்சிக்கிறார்.

அப்போது அங்கு வரும் நாயகன் சிபி, தன்னால் உயிரிழந்தவரின் மகன்தான் ஆதித்யா என்பது தெரியாமல் தாதாவின் அடியாக்களிடமிருந்து ஆதித்யாவை காப்பாற்றி நண்பன் ஜெகனின் இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கிறார்.

பிறகு ஆதித்யாவின் மனஅழுத்தம் பற்றி தெரிந்து கொண்டு அவனுக்கு சிகிச்சை அளித்து அனாதையாக இருக்கும் ஆதித்யாவுக்கு ராதாரவியின் கீழே உள்ள ஹோமில் சேர்த்துவிட முடிவு செய்கிறார். ஆனால், தனது தந்தை இறந்ததற்கு காரணம் சிபி தான் என்று ஆதித்யாவுக்கு தெரிய வருகிறது. இதனால், தாதா ஆட்களுடன் மோதவிட்டு பழி தீர்க்க வேண்டும். சிபியை கொலை செய்ய வேண்டும் என்று ஆதித்யா திட்டம் போடுகிறார்.

அவரது அந்த திட்டம் நிறைவேறியதா? தாதா ஆட்கள் சிபியை என்ன செய்தார்கள்?. பிரச்சினையில் சிக்கிய சிபி வெளிநாடு செல்ல முடிந்ததா? என்பதை மீதி படம் சொல்கிறது.

ஒரு விபத்து மூன்று கதைகளை இணைத்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளனர்.

நாயகனாக நடித்திருக்கும் சிபி காதல் காட்சியிலும், ஆக்சன் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வேதனைப்படும் காட்சியிலும், ஆதித்யாவின் சூழ்நிலையை அறிந்து கவலைப்படும் காட்சியிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.

கதாநாயகி பவ்யா ட்ரிகா காதல் காட்சிகளில் மட்டுமல்ல மனஅழுத்தம் உள்ள ஆதித்யாவை அதிலிருந்து வெளியே கொண்டுவர போராடுகிற காட்சில் அக்கறையுள்ள அன்புகாட்டும் பாத்திரத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.

கடனுக்கு சிறுவனை தூக்கும் பாத்திரத்தில் வின்செண்ட் நகுல். அவரது பாத்திரத்தை தாதாவா ஹோமோ செக்ஸ் பிரியரா என்று விளங்கி கொள்ள முடியவில்லை. இருப்பினும் ரொம்ப பில்டப்புடன் வருகிறார். அடிக்கிறார். அடிவாங்குகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் ஆதித்யா அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற இடங்களில் கோபத்தையும், மனஅழுத்தம் கொண்டு கத்துகிற காட்சில் பரிதாபத்தையும், கொலைவெறி கொள்ளும் போது வழக்கமான வில்லன் நடிப்பையும் வழங்கி அந்த பாத்திரமாகவே தெரிகிறார்.

படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின், இயல்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கிறார். காதலால் பெற்றோரை, குடியால் மனைவியை, விபத்தால் மகனை இழக்கும் தந்தையாக மனோஜ். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கருணை உள்ளம் கொண்ட பாதிரியாராக ராதாரவி, மற்றவர்களுக்கு உதவும் மனமுள்ள போலீஸாக பாலாஜி சக்திவேல், நண்பனுக்கு உதவும் ஜெகன் என படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களின் பாத்திரங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்

திரைக்கதையோடு பயணிக்கும் ஜெயசந்தர் பின்னேனியின் ஒளிப்பதிவு, சஸ்பென்ஸ் குறையாமல் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவிய சாம் சி எஸ். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

ஆசைகள் வாழ்க்கை பயணத்தை முடிக்க காரணமாக இருக்க கூடாது. அது காதலாக இருந்தாலும், காமமாக இருந்தாலும். காதல், காமம் இரு வெவ்வேறு கதைகளை ஒன்றாக இணைத்து அதில் பாதிக்கப்படும் சிறுவனையும் அவன் பிரச்சினையையும் சொல்லும் இயக்குநர் பாலாஜி மாதவன், திரைக்கதை அமைத்தத்தில் வல்லவராக இருக்கிறார். படமாக்கிய விதத்திலும் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். வில்லன் பாத்திரத்திற்கு பெரிய வேலை கொடுத்து காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இடி மின்னல் காதலை இன்னும் ரசித்திருக்கலாம்.

- Advertisement -

Read more

Local News