மலையாள திரையுலகில் தற்போதைய மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் டொவினோ தாமஸ். தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார். மகிழ்ச்சிகரமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பது தான் தன்னை திரையுலகில் நீண்ட காலமாக நிலைத்திருக்க உதவும் என்பதை புரிந்து, தொடர்ந்து அப்படிப்பட்ட கதையம்சங்களை கொண்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
2012ஆம் ஆண்டு ‘பிரபுவின்டே மக்கள்’ எனும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு திரையுலகில் அறிமுகமான அவர், அடுத்த ஆண்டு சல்மான் நடித்த ‘ஏபிசிடி’ படத்தில் வில்லனாக அரசியல்வாதியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் மாய நதி, மின்னல் முரளி போன்ற படங்களில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கடைசியாக ஏ.ஆர்.எம் படத்தில் நடித்திருந்தார் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது அதுமட்டுமின்றி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது.
இப்போது திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தனது நன்றியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள டொவினோ தாமஸ், “12 வருடங்களில் 50 படங்கள்… என் மனம் பெருமிதத்தால் நிரம்பி வழிகிறது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். குறிப்பாக என்னை தொடர்ந்து ஆதரித்தும் ஆரவாரம் செய்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இங்கு நான் எதையும் அடைய முடியாது” என்று கூறியுள்ளார்.