ஹிப் ஹாப் தமிழா ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கும், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து, வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் நேற்று மாலை படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது மிகுந்த திருப்தியளிக்கிறது.ஆதி இந்த கதையை என்னிடம் கூறியவுடன், உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.இப்பொழுது படத்தை பார்த்தபோது முழு திருப்தி ஏற்பட்டது.

“பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் இடையிலான காதல், பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது.எனது பள்ளி பருவத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்களின் காதலை சேர்த்து வைத்து திருமணம் செய்து வைத்தது நான் தான். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.இந்த படத்தில் நல்ல செய்தி உள்ளது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும்,” என்றார்.

அதற்கு பிறகு ஐசரி கணேஷிடம், ரஜினிகாந்த் நடிக்கும் 172-ஆவது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது அதுபற்றி கூறுங்கள் என செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர் இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவருடன் பேசி உள்ளோம். விரைவில் நல்ல செய்தி வரும், என்று தெரிவித்தார்.