கன்னட சினிமாவிலும் டிவி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சான்யா அய்யர். நம் அம்மா ஷாரதே, அரசி, புட்டகவுரி மதுவே போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் சிறுவயதிலேயே ரசிகர்களிடம் பிரபலமானார். கஜா, முகபுதா, விமுக்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் கன்னட பிக்பாஸ் ஓடிடி சீசன் 1ல் டைட்டில் வின்னராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு வெளிவந்த இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய கவுரி படத்தில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் நடைபெற்ற சைமா விருதுவிழாவில் “நம்பிக்கை நட்சத்திரம்” விருதைப் பெற்றார். இந்நிலையில் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறுகையில், “குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பலனாக இன்று நம்பிக்கை நட்சத்திரம் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. என்னை நேசிக்கும் ரசிகர்கள், என் குடும்பம், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி. மொழிகளை தாண்டி பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது விரைவில் நிறைவேறப் போகிறது. விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறேன்” என்றார்.