நடிகர் அஜித் தனது ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்துள்ளார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில், அஜித் வரும் 20ம் தேதி முதல் அசர்பைஜானில் துவங்கவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.
விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ள திரிஷா தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். வரும் 20ம் தேதி முதல் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை அசர்பைஜானில் துவங்க திட்டமிட்டு, தயாரிப்பு தரப்பில் படப்பிடிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த படத்திற்காக லைகா நிறுவனம் 13 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாம்.
அஜித் இதுவரை தனது சம்பளத்தின் 50 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளதாகவும், மீதம் தரவேண்டிய சம்பளத்தை கொடுக்குமாறு கேட்பதாகவும் இதற்கு பிறகே படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உலாவருகின்றன.
இந்நிலையில்’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப்போகின்ற சூழலில், தற்போது மீண்டும் படப்பிடிப்பை எடுத்து முடிக்க தயாரிப்பு தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அஜித்தின் இந்த முடிவு படக்குழுவை செய்வதறியாது யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.