வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர, பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. வெளிமாநிலங்களில் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்தியுள்ளனர். தற்போது, காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ‘தி கோட்’ தயாரிப்பு நிறுவனம் இந்த சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளித்தது.
இந்த நிலையில், நாளை படம் வெளியிடப்படும் அன்று மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுவாக காலை காட்சிகள் 10:30 மணிக்குப் பிறகே துவங்கும். ஆனால் நாளை மட்டும் காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகளை திரையிடலாம்; காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகளை முடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஏஜிஎஸ் தரப்பில் இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அரசு ஒரு நாளுக்கே அனுமதி வழங்கியுள்ளது.