தெலுங்கு திரைப்பட உலகில் விரைவாக முன்னேறி வரும் இளம் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடிக்கிறார். இதற்கு கூடுதலாக, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பைத் தவிர, நடனத்திலும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியவர் ஸ்ரீலீலா. மகேஷ் பாபுவுடன் நடனம் ஆடிய மடக்கி தட்டு, அல்லு அர்ஜுனுடன் ஆடிய கிஸ்ஸிக் ஆகிய பாடல்களில் அவரின் நடனத் திறன் பெரிதும் பாராட்டப்பட்டது.

தற்போது, தெலுங்கில் நிதினுடன் இணைந்து ராபின்ஹுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் பேசிய தொகுப்பாளர், “லீலா என்றால் பாட்டு, பாட்டு என்றால் நடனம், நடனம் என்றால் லீலா” என்று கூறினார். இதற்கு உடனடியாக பதிலளித்த ஸ்ரீலீலா, “லீலா என்றால் வசனம், வசனம் என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் லீலா இதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்” என்று கூறினார்.
அவருடைய நடிப்பைப் பற்றியதை விட நடனமே அதிகமாக பேசப்படுகிறது. இதனால், அவருக்கு டான்சர் என்ற முத்திரை விழுந்துவிட்டது. தன்னை நடிகையாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, இதை மாற்றிக்காட்ட இந்த பதிலை அளித்துள்ளார் ஸ்ரீலீலா என்பது குறிப்பிடத்தக்கது.