நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகையாவார். தமிழ் திரையுலகில், அவர் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘ரெட்ரோ’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது, மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதில் மட்டுப்படாமல், இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் விஜயின் 69வது படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், அவர் அளித்த ஒரு நேர்காணலில், தென்னிந்தியத் திரைப்பட உலகின் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
‘ரெட்ரோ’ பட வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்பதைப் பற்றி அவர் கூறியதாவது, “இந்த படத்தில் எனது கதாபாத்திரம், நான் இதுவரை செய்த எந்த வேடத்திலும் இல்லாத ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். கடந்த காலத்தில் நான் நடித்த ‘ராதே ஷ்யாம்’ படத்தில், எனது இரண்டு முக்கியமான உணர்ச்சிகரமான காட்சிகளின் மூலம், இந்த ‘ரெட்ரோ’ படத்தில் எனக்கான வாய்ப்பு வந்தது. இதை நேரிலேயே இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” எனத் தெரிவித்துள்ளார்.