சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் ஹலிதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மின்மினி. இப்படத்தை ஆங்கர் பே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதையமுடையது என்பதால், நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி, உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இது திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமையான முயற்சியாகும்.

இந்த திரைப்படம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகப்பெரிய எதிர்பார்ப்பில், ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மின்மினி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தரமான புதுமையான ஃபீல் குட் திரைப்படம் இதுவென கருத்து தெரிவித்து வருகின்றனர்.