மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் சாயிபாய் தம்பதியின் முதன்மை மகனாகப் பிறந்த சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாவா’. இந்தப் படத்தை லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ளார், மேலும், ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். அவரின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதற்காக, நடிகர் அக்சய் கண்ணா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தன்று வெளியான இப்படம், இதுவரை ₹197 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், சத்ரபதி சம்பாஜியின் தந்தையான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 395-வது பிறந்த நாள், நேற்றைய தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது மாநிலத்தில் ‘சாவா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கோவா மாநிலத்திலும் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என, கோவா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலின் படி, சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் அவருடைய தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘சாவா’ திரைப்படத்திற்கு கோவா மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், சத்ரபதியின் தியாகம், அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.