தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், முத்தையா (குங்குமராஜ் முத்துசாமி) எனும் எலக்ட்ரீஷியன் தன் மனைவி செல்லம்மாளுடன் (வைரமாலா) வாழ்ந்து வருகிறார். எப்போதும் மதுபோதையிலிருக்கும் முத்தையாவிற்கு யாரும் வேலை தருவதில்லை. வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை பிடுங்கிக் கொள்கிறார்கள் என அவர் எண்ணி, அவர்களை வெறுக்கிறார். இந்த கோபம், எதிர் வீட்டில் இருக்கும் வடமாநில இளைஞர் சுனில் (பர்வைஸ் மக்ரூ) மீதும் திரும்புகிறது. ஒரு நேரத்தில் இருவருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட, சுனிலை கொலை செய்ய மதுபோதையில் தனது நண்பர் வரதனுடன் (ரமேஷ் வைத்யா) சேர்ந்து திட்டமிடுகிறார் முத்தையா.
சுனிலுக்கு என்ன ஆனது, சுனில் முத்தையாவின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறார் என்பதற்கான பதிலை அறிமுக இயக்குநர் பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் சொல்கிறது.மதுபோதையில் தள்ளாடி மனைவியுடன் மல்லுக்கட்டுவது, வடமாநிலத்தவர்களிடம் முரட்டுத்தனமாக நடப்பது என ஒருபக்கம் முரடராக காட்டப்பட்டாலும், மறுபுறம் நண்பரிடம் அழுவது, குழந்தைகளுடன் விளையாடுவது என நெகிழ்ச்சியுடனும் இருப்பதை குங்குமராஜ் முத்துசாமி காட்டியுள்ளார். ஆனால் இறுதிக்காட்சிக்கு தேவையான உணர்ச்சியின் வெளிப்பாடு அவரது நடிப்பில் மிஞ்சியுள்ளது. நாயகியாக வைரமாலா எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கணவனை மிரட்டுவது, இரண்டாம் பாதியில் அழுவது போன்ற எல்லா உணர்ச்சிகளையும் ஆற்றியுள்ளார்.
வடமாநில இளைஞராக பர்வைஸ் மக்ரூ தனது நடிப்பால் அப்பாவித்தனம், பாசம், எதார்த்தம் ஆகியவற்றைக் காட்டி பார்வையாளர்களிடமிருந்து இரக்கத்தைப் பெற்றார். ரமேஷ் வைத்யா தனது பேச்சு வழக்கிலும் சேட்டைகளாலும் ஆங்காங்கே சிரிக்கவைத்தார், ஆனாலும் சில பழைய நகைச்சுவைகளை தவிர்த்திருக்கலாம். மற்ற துணை கதாபாத்திரங்கள் தங்கள் வேலையைச் செய்தனர். வீட்டு உரிமையாளராக வரும் பாட்டி பல இடங்களில் அட்டகாசமாக நடித்தார்.தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் நிலவியலைக் காட்டும் காட்சிகளும், இரவு நேர ஒளியமைப்பும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அதிகப்படியான க்ளோஸ் அப் ஷாட்கள் சலிப்பை உண்டாக்குகின்றன. நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு முதற்பாதியை செறிவாக தொகுக்கவில்லை. எஸ்.ஜே.ஜனனியின் இசையில், ரமேஷ் வைத்யா வரிகளில் ‘பூ பூக்குது’ பாடல் காதுகளுக்கு இனிமையாக இருந்தாலும், திரைக்கதைக்கு வேகத்தடையே. அவரின் பின்னணி இசை உணர்ச்சிகரமான இடங்களில் மட்டுமே பொருந்தியதாக இருந்தது.
ஒலி வடிவமைப்பாளர் ராஜேஷ் சசீந்திரனின் ‘லைவ் சவுண்ட்’ முறை தொடக்கத்தில் தனியனுபவத்தை கொடுத்தாலும், பல வசனங்கள் தெளிவில்லாமல் சிரமத்தை உண்டாக்குகின்றன. அ.அமரனின் கலை இயக்கம் தேவையான எதார்த்தத்தை தந்துள்ளது.கிராமம், அமைதியான வீடுகள், மக்கள் வாழ்க்கை எனப் படம் தொடக்கத்தில் ரசிக்க வைக்கிறது. ஆனால் அதன்பின் பிரதான பாத்திரங்களை மீண்டும் மீண்டும் விளக்குவது, முத்தையாவின் குடும்ப சூழலை பல்வேறு வடிவங்களில் விவரிப்பது என முதற்பாதி இழுத்துச் செல்லும். நடிகர்களின் நடிப்பும், குறைவான கதாபாத்திரங்களும் அவர்களுக்குரிய வட்டார பேச்சு வழக்கும் சுவாரஸ்யம் அளித்தாலும், பழைய ஐடியாக்களால் திரைமொழி புதுமையாக இல்லை.
தனிமனித ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிராந்தியத்தில் குறைந்த சம்பளத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாது. இதனால், உள்ளூர் முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக வெளி பிராந்தியங்களில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அழைத்துவருகின்றனர். இந்த நிதர்சனத்தை கணக்கில் கொள்ளாமல், கதாநாயகனின் குடிப்பழக்கத்தாலும், பொறுப்பில்லாத குணத்தாலும்தான் வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதாக ஒரு தரப்பை குறைசொல்வது சிக்கலான பார்வை. இந்த பார்வைக்கு வலுசேர்க்க சில மிகையான காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனினும் இந்த ரயிலில் ஒருமுறையாவது சென்று பயணம் செய்வது (திரையில் படத்தை பார்ப்பது) நன்றே…