நடிப்பு அரக்கன் எனப் புகழைப் பெற்றது மட்டும் இல்லாமல் அதை தொடர்ந்து படத்திற்கு படம் நிரூபித்துக் கொண்டு வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. வில்லனாக நடித்து, கதாநாயகனை மிஞ்சி ரசிகர்களிடம் பாராட்டு பெறும் நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா எப்போது படங்களை இயக்குவார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அவர் கில்லர் என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கான தகவல்களும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தப் படத்தை இயக்க எஸ்.ஜே. சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வரும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் பூஜை நடைபெற்று, அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும், படத்திற்கான கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணிகளில் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா தரப்பில் இருந்து துஷாரா விஜயனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.