இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய கௌதம் மேனனின் படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இது அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. மலையாளியான அவர், மலையாளத்தில் இதுவரை ஒரு படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் மம்முட்டியின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க கௌதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த மாதம் 15ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நகரில் துவங்க உள்ளது. வரும் 20ம் தேதி மம்முட்டி படப்பிடிப்பில் இணையவுள்ளார். ஆக்சன் திரில்லர் வகை படமாக இது உருவாக உள்ளது. தன்னுடைய சொந்த தயாரிப்பிலும் மற்றவர்களின் தயாரிப்பிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் மம்முட்டி. கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் இணையும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மம்முட்டி ஜோதிகாவுடன் நடித்த காதல் தி கோர் மற்றும் பிரம்மயுகம் படங்கள் வெளியானது.

மம்முட்டி – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மம்முட்டியுடன் இந்த படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் சமந்தாவும் முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். முன்னதாக மம்முட்டியுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மம்முட்டியுடன் விளம்பரத்தில் சமந்தா நடித்தது குறிப்பிடத்தக்கது.