மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ், சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய “லூசிபர்” படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக தன்னை நிரூபித்தார். லூசிபர் வெளியான போது, அது மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் என்று அறிவித்த பிறகு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இப்போது, பிரித்விராஜ் “லூசிபர் 2” என்கிற “எம்புரான்” படத்தின் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமன்றி, பல புதிய நடிகர்களும் இணைந்து வருகின்றனர். கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த மற்றும் தற்போது கதாநாயகனாக நடிக்கும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்பிலிருந்து அவரது புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
