மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு, தனது அடுத்த படமாக ஆட்டியை இயக்கியுள்ளார். இதில் இசக்கி கார்வண்ணன் மற்றும் அயலி தொடரின் புகழ்பெற்ற அபிநட்சத்திரா நடித்துள்ளனர். ஆட்டி என்றால் பெண் தலைமையை குறிக்கும் சொல். அதேபோல ‘பெண்டாட்டி’ என்ற சொல்லும் அதிலிருந்தே வந்ததாகக் கூறப்படுகிறது. “எங்கள் குலத்தில் பெண்களே தலைவர்கள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல குல தெய்வங்கள் பெண்தெய்வங்களாகவே வணங்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் பெண்மையை போற்றிய இனமாகும். சங்ககாலத்திலேயே பெண்களை கொண்டு படைகளை வைத்திருந்தோம் என்பதும் வரலாற்று உண்மை. இந்த படத்தில் சங்ககாலப் பெண்ணாக, ஜாக்கெட் அணியாமல் அபிநட்சத்திரா நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படம் குறித்து அபிநட்சத்திரா கூறுகையில், “இந்தப் படத்தின் மூலம் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். என் கதாபாத்திரமும், கெட்அப்பும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இயக்குனரின் மனைவியே இப்படத்தின் காஸ்ட்யூமராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆட்டி படம் அதன் பெயரைப் போலவே பெண்மையின் வலிமையை வெளிப்படுத்தும் திரைப்படமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.