திரில்லர் படம் என்றாலே பொதுவாக அது பேய்ப் படம் அல்லது கிரைம் படம் ஆக இருக்கும். ஆனால், பிளாக் மாறுபட்ட ஒரு விஞ்ஞான நாவல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கற்பனைக்கெட்டாத ஒரு கதையம்சம் இருந்தாலும், அதனை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குநர் பாலசுப்ரமணி.
ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் விடுமுறையை கொண்டாட கடற்கரை பகுதியில் வாங்கியுள்ள ‘வில்லா’ ஒன்றிற்குச் செல்கிறார்கள். புதிதாக கட்டப்பட்ட அந்த வில்லாவில் அவர்கள் தான் முதன்முதலில் குடியேறுகிறார்கள். இரவு ஆனதும் சில மர்மமான நிகழ்வுகள் நடைபெறத் தொடங்குகிறது. யாரும் இல்லாத அந்த குடியிருப்பில் யாரோ இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள். எதிர் வீட்டில் திடீரென்று விளக்குகள் எரிகிறது. என்னவென்று போய் பார்த்தால், அந்த வீட்டிற்குள் ஜீவாவும் பிரியா பவானியுமே இருப்பதை கண்டடைகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஏன் இது நடக்கிறது என்பதையும், அதன் பின்னணி காரணம் என்ன என்பதையும் விவரிக்கும் மீதிக் கதை நன்றாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் முக்கிய அம்சம் நூற்றுக்கும் மேற்பட்ட வில்லா வீடுகளால் சூழப்பட்ட கடற்கரையோரக் குடியிருப்பு. அங்கு சில நாட்களுக்கு மட்டும் தங்குவதற்காகச் செல்கிறார் கணவன் மனைவி. பின்னர் அங்கு நிகழும் விசித்திரமான மற்றும் மர்மமான சம்பவங்கள், ஒரே இடம், இரண்டே கதாபாத்திரங்களுடன் இரண்டு மணி நேரம் நிறைய சுவாரசியத்தை சீராக நகர்த்துகிறது. 2013ல் வெளியான ‘கோஹெரன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், அப்படத்தில் ஆண், பெண் நண்பர்களாக இருந்ததை மாற்றி, இந்தப் படத்தில் கணவன், மனைவியாக மாற்றியுள்ளனர். தழுவலாக இருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த மாதிரி ஒரு மேக்கிங் அனுபவம் தருகின்றது.
திரில்லர் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பயம், பதட்டம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். இதனை சரியாகச் செய்துள்ளனர் ஜீவா, பிரியா பவானி சங்கர். ஆரம்பக் காட்சிகளில் காதல் காட்சிகள் சற்றே அதிகம் இருந்தாலும், பின்னர் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஜீவா ஒருவருடன் சண்டையிடும் காட்சி தேவையின்றி சேர்க்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக தமிழ் திரையுலகில் காணாமல் போன ஜீவாவுக்கு இந்தப் படம் முக்கியமான படமாக அமையக்கூடும்.
ஜீவா, பிரியாவைத் தவிர, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் யோக் ஜபீ, ஜீவாவின் நண்பராக ஷரா, ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பிரியாவின் தோழியாக ஸ்வயம் சித்தா ஆகிய நால்வரும் சில காட்சிகளில் தோன்றுகின்றனர்.படத்தின் மிரட்டலான சூழ்நிலைக்குக் காரணமாக இருப்பவர் கோகுல் பினாய், அவரின் ஒளிப்பதிவு. ஒரே இரவில் நடக்கும் கதையை, அழகான வில்லா குடியிருப்பில் நமக்கு பயம் உண்டாக்கும் வகையில் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒளியின் அசைவுகள் அவ்வளவு சீரானது. காட்சிகளை குழப்பமின்றி தொகுத்து வழங்கியதில் எடிட்டர் பிலோமின் ராஜுக்கு முக்கிய பங்கு உண்டு. இருந்தாலும், கதையின் இறுதியில் சற்று குழப்பம் வருவது தவிர்க்க முடியாதது. ஓடிடியில் படம் வெளியான பிறகு நிறுத்தி பார்த்தால் புரியக்கூடும். பின்னணி இசை வழங்கியுள்ள சாம் சிஎஸ் வழக்கமான சத்தத்தை குறைத்து, ரசிக்க வைத்திருக்கிறார்.