தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே முன்னணி இளம் நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில், தற்போது அவர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக நாளை மறுநாள் (அக்.17) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கின்றார், முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார்.

சமீபத்தில், இதன் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களில் ஒருவர் “நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே” என்ற சர்ச்சையான கேள்வியை முன் வைத்தார். இதற்கு பிரதீப் ரங்கநாதன் அமைதியாக பதில் அளித்து கடந்து சென்றிருந்தாலும், அந்த சந்திப்பில் சரத்குமார் அவருக்கு ஆதரவாக பேசினார். இதையடுத்து இன்னும் சில பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு புரமோஷனின் ஒரு பகுதியாக நடிகர் நாகார்ஜுனா நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதீப் ரங்கநாதன் பங்கேற்றார். அப்போது ஹீரோ மெட்டீரியல் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக, அவருக்கு ஆதரவாக நாகார்ஜுனா பேசினார்: “சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு தீப்பொறி போல சினிமாவிற்கு நுழைந்து அதன் போக்கையே ஒருவர் மாற்றினார். அவர் பெயர் ரஜினிகாந்த். அதன்பிறகு சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு தீப்பொறி போல ஒருவர் நுழைந்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் பெயர் தனுஷ். இன்னும் சில வருடங்கள் கழித்து இப்போது நான் பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன்” என்று கூறினார். அவரது பேச்சால் நெகிழ்ந்த பிரதீப் ரங்கநாதன், “சார், இது உண்மையிலேயே மிகப்பெரிய வார்த்தைகள். அதுவும் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வரும்போது, இந்த உலகமே எனக்கு என்று தோன்றுகிறது” என்று தெரிவித்தார்.