உலக அழகி பட்டத்தை வென்று சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தனது சிறந்த நடிப்பின் மூலம் பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் ‘லைக்’ மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கானவை மட்டுமல்ல; அவற்றுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட சக்தி உள்ளது. அந்த சக்தி நமக்குள் இருந்துதான் உருவாக வேண்டும். இதை நான் ஒரு பெற்றோராகச் சொல்கிறேன். சமூக ஊடக அழுத்தமும், சமூக அழுத்தமும் வேறுபட்டவை அல்ல.
இப்போது நாம் சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள், கருத்துகள், செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ளவை என முடியாது; அவை பெரும்பாலும் ஒருவரின் விருப்பு, வெறுப்புகளுக்கே இணையாக இருக்கின்றன. நாம் யார் என்பதை பிறர் தீர்மானிக்கக் கூடாது. இதை நான் ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும் வலியுறுத்திச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார்.