பரமசுந்தரி என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானதிலிருந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஜான்வி கபூர் மலையாளப் பெண்ணாக நடித்திருந்தார்.

ஆனால் ஜான்வியின் மலையாள உச்சரிப்பு குறித்து சில ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இதுகுறித்து நடிகை பவித்ரா மேனன் தனது கருத்தை பகிர்ந்தபோது, “பரமசுந்தரி படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் பார்க்க சங்கடமாக இருந்தது. உலகிலேயே எந்த கதாபாத்திரத்தையும் எந்த நடிகராலும் செய்யவைக்கலாம். அதனால்தான் அவர்களை நடிகர்கள் என்று அழைக்கிறோம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். கேரளாவில் நாங்கள் அனைவரும் பாலிவுட்டை நேசிக்கிறோம். ஷாருக்கான், கரீனா கபூர் மற்றும் பிற பிரபலங்களின் படங்களை பார்த்து வளர்ந்தோம். ஆனால் வெளிப்படையாக சொல்வதானால் இந்தி சினிமாவில் நுணுக்கம் மிக அதிகமாக இருப்பதில்லை. பத்து படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே உண்மையில் சிறப்பாக இருக்கும். மீதமுள்ள எட்டு படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் உருவாகின்றன” என தெரிவித்தார்.
ஏற்கனவே ஜான்வியின் மலையாள உச்சரிப்பை விமர்சித்த பவித்ரா மேனன், மலையாள நடிகைகளை தவறாக காட்டுவதே பாலிவுட் சினிமாவின் பணியா? என்றவாறு சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதைத்தொடர்ந்து பவித்ரா மேனன் தற்போது நான் ஜான்வி கபூரைப் பற்றிப் பொறாமையால் பேசியதில்லை. அவரை கேலி செய்வதற்கான நோக்கத்திலோ அல்லது அதுபோன்ற எந்தவொரு முறையிலோ என் வீடியோவும் இருக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் .