பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவர் நடிகை ரோகிணி கூறியதாவது: “பாலியல் புகார்களைக் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன் ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்களை அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. 2019ம் ஆண்டிலேயே நடிகர் சங்க விசாகா கமிட்டி இந்த புகார்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் உள்ளனர்.
புகார் கொடுப்பவர்களின் பெயர் வெளியிடப்பட மாட்டாது. பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள்; அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துறையில் இல்லை. திரையுலகத்தை பற்றிய தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.
சில புகார்கள் வந்தாலும், அவற்றை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அவற்றை வெளியிடவில்லை. எங்கு இருந்தாலும் நம் உறுப்பினர்களுக்கு பாலியல் பிரச்னைகள் ஏற்படின் தைரியமாக இருங்கள்; புகார் அளிக்க முன்வருங்கள். இதற்காக திரைத்துறையில் பாலியல் புகார்களை அளிக்க பிரத்யேக எண் வழங்க உள்ளோம், என்றார்.